< Back
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட்டில்  தலைமை தேர்தல் ஆணையர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்டில் தலைமை தேர்தல் ஆணையர் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

தினத்தந்தி
|
16 Oct 2024 8:28 PM IST

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் சென்ற ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, உத்தரகாண்ட்டில் தரையிறக்கப்பட்டது.

டேராடூன்,

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார். இந்தநிலையில் உத்தரகாண்ட்டில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஹெலிகாப்டரில் பயணம் செய்தார். அவருடன் உத்தரகாண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விஜய் குமார் உள்ளிட்ட சிலர் பயணித்தனர். ஹெலிகாப்டர், மோசமான வானிலை காரணமாக, உத்தரகண்ட் மாநிலத்தில் தரையிறக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் சட்டசபை தொகுதி உள்ளது.இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த பாஜக எம்எல்ஏ சைலா ராவத் கடந்த ஜூலை மாதம் காலமானார். இவரது மறைவை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து தேர்தல் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று ஹெலிகாப்டரில் அங்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று வானிலை மாறியது. மோசமான வானிலை நிலவியது. மேற்கொண்டு பயணித்தால் ஹெலிகாப்டரில் விபத்தில் சிக்கலாம் என்று பைலட் எச்சரித்தார். இதையடுத்து உடனடியாக பாதிவழியில் பிதோராகார்க் மாவட்டத்தில் முஞ்சியாரி அருகே உள்ள கிராமத்தில் ஹெலிகாப்டர் அவசர அவசரமாக பிற்பகல் 1.30 மணியளவில் தரையிறங்கியது. இதனால் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். ஹெலிகாப்டரில் பயணித்த தலைமை தேர்தல் ஆணையருக்கு, பிற அதிகாரிகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்