உத்தர பிரதேசம்: 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண்; 7-வது முயற்சியில் கைது
|உத்தர பிரதேசத்தில் 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய இளம்பெண் 7-வது முயற்சியின்போது கைது செய்யப்பட்டார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் பண்டா பகுதியை சேர்ந்த சங்கர் உபாத்யாய் என்ற இளைஞர், திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். இதனை அறிந்த விமலேஷ் என்ற நபர், தனக்கு தெரிந்த வரன் ஒன்று இருப்பதாகவும், திருமண ஏற்பாடுகளை செய்ய ரூ.1.5 லட்சம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதற்கு சங்கர் உபாத்யாய் ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு பூனம் மிஸ்ரா என்ற இளம்பெண்ணை விமலேஷ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதோடு, உடனடியாக ரூ.1.5 லட்சத்தை தன்னிடம் தருமாறு விமலேஷ் வற்புறுத்தி கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சங்கர் உபாத்யாய், அந்த இளம்பெண் மற்றும் அவரது தாயாரின் ஆதார் அடையாள அட்டைகளை கேட்டிருக்கிறார்.
இதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால், இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று சங்கர் உபாத்யாய் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து சங்கரை மிரட்ட தொடங்கியுள்ளனர். திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் போலீசில் பொய் வழக்கு போடுவோம் என்றும், கொலை செய்து விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். தனக்கு சிந்திப்பதற்கு கொஞ்சம் அவகாசம் தேவை என்று கூறி அவர்களிடம் சங்கர் உபாத்யாய் தப்பி வந்துள்ளார்.
பின்னர் இது குறித்து உடனடியாக அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோதுதான் இந்த கும்பலின் மோசடிகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதாவது பூனம் மிஸ்ரா என்ற இளம்பெண் இதுவரை 6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார். அவரது தாயாக சஞ்சனா குப்தா என்ற பெண் நடித்துள்ளார்.
இதுதவிர விமலேஷ் வர்மா மற்றும் தர்மேந்திர பிரஜாபதி ஆகியோர், திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து தங்கள் வலையில் சிக்க வைத்துள்ளனர். இவர்களின் திட்டப்படி முதலில் பூனம் மிஸ்ராவுக்கும், சம்பந்தப்பட்ட இளைஞருக்கும் மிக எளிமையான முறையில் திருமணம் நடத்தி வைத்துவிட்டு, திருமண செலவுக்கு என்று கூறி மணமகனிடம் இருந்து ரொக்கமாக பணத்தை பெற்றுள்ளனர்.
திருமணம் முடிந்த பிறகு, மணமகனின் வீட்டில் உள்ள பணம், நகை ஆகியவற்றை திருடிக்கொண்டு பூனம் மிஸ்ரா தப்பிவிடுவார். இவ்வாறு 6 ஆண்களை இவர்கள் ஏமாற்றிய நிலையில், 7-வது முறையாக ஒருவரை ஏமாற்ற முயற்சி செய்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.