உத்தர பிரதேசம்: திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி வழிபாடு
|உத்தர பிரதேசத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
லக்னோ,
உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாசார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக 'மகா கும்பமேளா' விளங்குகிறது. இந்நிலையில், 'மகா கும்பமேளா 2025' வரும் ஜனவரி 13-ந்தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக இந்தியா முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகளை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பக்தர்களின் தேவைக்காக 1.5 லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மகா கும்பமேளாவிற்காக உத்தர பிரதேச மாநிலத்தில் 66 கிராமங்களை ஒருங்கிணைத்து புதிய நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற உள்ள இடத்திற்கு பிரதமர் மோடி இன்று நேரில் சென்றார். அங்கு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் இணையும் இடமாக திகழும் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு செய்தார். அப்போது உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் பட்டேல் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் அங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஆற்றில் படகு சவாரி மேற்கொண்ட பிரதமர் மோடி, மகா கும்பமேளாவிற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.