121 பேரை பலிகொண்ட உ.பி. ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி - நடந்தது என்ன?
|உத்தரபிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த ஆன்மிக சொற்பொழிவை பாபா நாராயன் ஹரி என்ற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் நடத்தினார்.
போலே பாபா சாமியார் ஹத்ராஸ் மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் மிகவும் பிரபலமானவர் ஆவார். இதனால், அவரது ஆன்மிக சொற்பொழிவை கேட்க சுற்றுவட்டாரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-
80 ஆயிரம் பேருக்கு அனுமதி;-
சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
குவிந்த 2.5 லட்சம் பேர்:
80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் சாமியார் போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சியை காண 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சாமியார் போலே பாபாவை பார்க்க முயற்சி:
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் போலே பாபா நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது அவரை பார்க்க பக்தர்கள் குவிந்தனர்.
சாமியார் காரை பின்தொடர்ந்து ஓட்டம்
ஆன்மிக சொற்பொழிவு நிறைவடைந்த உடன் போலே பாபா காரில் புறப்பட்டுள்ளார். அப்போது அவரது காரை பின் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஓடியுள்ளனர்.
கூட்ட நெரிசல்:-
சாமியார் போலே பாபாவை பார்க்க முயன்ற பக்தர்கள் அவரை நோக்கி முன்னேறியுள்ளனர். மேலும், அவர் காரில் புறப்பட்டபோது அவரது காரை பின் தொடர்ந்து ஓடியுள்ளனர். இதனால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சாமியாரின் காலடி மண்:-
சாமியார் ஆன்மிக சொற்பொழிவை நிறைவுசெய்தபின் புறப்பட்டபோது அவரது காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் முயற்சித்துள்ளனர். அவர் நடந்து சென்றபாதையில் காலடி மண்ணை எடுக்க ஆயிரக்கணக்கானோர் குனிந்துள்ளனர்.
ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்;-
சாமியார் போலே பாபா நடந்து சென்றபாதையில் அவரது காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் குனிந்தபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
கூட்ட நெரிசல், மூச்சுத்திணறல்:-
சாமியாரின் காலடி மண்ணை எடுக்க பக்தர்கள் குனிந்தபோது ஒருவர் மீது ஒருவர் விழுந்துள்ளனர். இதனால், கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
சாக்கடைக்குள் விழுந்தனர்:-
நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு அருகே சாக்கடையும் ஓடியுள்ளது. நிகழ்ச்சி முடிந்ததும் பக்தர்கள் வேகவேகமாக வெளியேற முயற்சித்தபோது சாக்கடைக்குள் விழுந்துள்ளனர்.
வெளியேற முயற்சித்தபோதும் கூட்டநெரிசல்:-
நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் சாமியார் போலே பாபா வெளியேறியநிலையில் உடனடியாக அவரது பக்தர்களும் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்தில் இருந்து வெளியேற முயற்சித்துள்ளனர். மைதானத்தில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது.
121 பேர் பலி:-
சாமியாரின் காலடி மண்ணை எடுக்க முயற்சி, ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால், வெளியேற முயற்சித்தபோது கூட்டநெரிசல், சாமியாரை பார்க்க பின் தொடர்ந்து ஓடியபோது நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதில் பலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலானோர் பெண்கள்:-
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசல் சம்பவத்தில் 121 பேர் உயிரிழந்த நிலையில் இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த 121 பேரில் 108 பேர் பெண்கள் ஆவர். 7 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவான சாமியார் போலே பாபா:-
கூட்டநெரிசலில் சிக்கி 108 பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழந்த நிலையில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியை நடத்திய சாமியார் போலே பாபா தலைமறைவாகியுள்ளார். அவரை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வழக்குப்பதிவு:-
121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தேவ்பிரகாஷ் மதுகர் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.