உத்தர பிரதேசம்: பாலியல் பலாத்கார முயற்சியில் 8 வயது சிறுமி கொலை - சாக்கு மூட்டையில் உடல் கண்டெடுப்பு
|பாலியல் பலாத்கார முயற்சியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், ஒரு பள்ளி அருகே 8 வயது சிறுமியின் உடல் சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் விரைந்து சென்று சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த சிறுமி கொசுவர்த்தி வாங்குவதற்காக தனது வீட்டின் அருகே உள்ள கடைத்தெருவுக்கு சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, சிறுமியை பின்தொடர்ந்து ஒரு நபர் செல்வதும், சிறிது நேரம் கழித்து அந்த நபர் ஒரு சாக்கு மூட்டையை தூக்கிச் செல்வதும் பதிவாகி உள்ளது.
இதையடுத்து, சிறுமியை பின்தொடர்ந்து சென்ற இர்ஷாத் என்ற நபரை போலீசார் அடையாளம் கண்டு அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமியை இர்ஷாத் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதும், பின்னர் சிறுமி கூச்சலிட்டதால் அவரை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி பள்ளி அருகே கொண்டு சென்று வீசியதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து கைதான நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.