< Back
தேசிய செய்திகள்
ரீல்ஸ் வெளியிட்டதால் ஆத்திரம்: மனைவியை கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூர கணவன்
தேசிய செய்திகள்

'ரீல்ஸ்' வெளியிட்டதால் ஆத்திரம்: மனைவியை கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டிய கொடூர கணவன்

தினத்தந்தி
|
15 July 2024 6:59 AM IST

சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டதால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை கொன்று உடலை துண்டுதுண்டாக வெட்டியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவின் உப்பல் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் போலா. இவரது மனைவி மதுமிதா (வயது 24). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த பிரதீப் போலா, தெலுங்கானாவில் உள்ள ஓட்டலில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆர்வம் உள்ள மதுமிதா இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிடுவது வழக்கம். ஆனால் இது பிரதீப் போலாவுக்கு பிடிக்கவில்லை.

இதனால் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தக்கூடாது, 'ரீல்ஸ்' வீடியோ வெளியிடக்கூடாது என்று அவர் கண்டித்துள்ளார். ஆனால் மதுமிதா அவர் பேச்சை கேட்காமல் தொடர்ந்து 'ரீல்ஸ்' வெளியிட்டு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப் போலா, கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுமிதாவை கத்தியால் தலையில் வெட்டிக்கொன்றார். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி ஒரு சாக்குமூட்டையில் கட்டினார்.

அந்த மூட்டையை தனது வீட்டில் உள்ள குளியல் அறையில் வைத்துவிட்டு தனது குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே ஓட்டலுக்கு வேலைக்கு வராததால், அங்கிருந்த சக ஊழியர்கள் பிரதீப் போலாவை தேடி அவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்தனர். அப்போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அவர்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து போலீசார் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது குளியல் அறையில் இருந்த சாக்குமூட்டையில் மதுமிதாவின் உடல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சமையல்காரரை தேடி வந்தனர். இதற்கிடையே பெகும்பேட்டையில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ வெளியிட்டதால் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்