தேசிய செய்திகள்
உ.பி. மருத்துவமனை தீ விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
தேசிய செய்திகள்

உ.பி. மருத்துவமனை தீ விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

தினத்தந்தி
|
16 Nov 2024 3:09 PM IST

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு வார்டில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஷார்ட் சர்க்யூட் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறோம். மாநில அரசின் மேற்பார்வையின் கீழ், உள்ளூர் நிர்வாகம் நிவாரணம் மற்றும் மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்