உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 5 பேர் பலி
|உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 5 உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு ஒரு குடும்பத்தினர் காரில் நேற்று இரவு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மாவட்டத்தின் பரேலி-எட்டாவா நெடுஞ்சாலையில் உள்ள பர்கெடா ஜெய்பால் சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிரே வந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டிரக் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் ரியாசுல் அலி (45), அம்னா (42), குடியா (9), தமன்னா 'அனு' (32), மற்றும் நூர் (6) என அடையாளம் காணப்பட்டனர். ஷாஜஹான்பூரில் உள்ள கான்ட் நகரில் வசிக்கும் ரியாசுல், டெல்லியில் ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.