உ.பி. இடைத்தேர்தலில் இரு தரப்பினர் மோதல்.. கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு
|தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்கள் மூலம் கள்ள ஓட்டு போடப்படுவதாக ராஷ்டிரிய லோக் தளம் வேட்பாளர் மித்லேஷ் பால் குற்றம்சாட்டினார்.
முசாபர்நகர்:
உத்தர பிரதேச மாநிலம் மீராபூர் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி சுமுகமாக நடைபெற்று வரும் நிலையில், அந்த தொகுதிக்குட்பட்ட காக்ரோலி கிராமத்தில் வாக்குப்பதிவின்போது திடீரென இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் நிலைமை கட்டுக்குள் வந்தது. எனினும் பாதுகாப்பு கருதி அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் சிங் தெரிவித்தார். மோதலுக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை.
இதற்கிடையே மீராபூரில் மக்களின் எதிரிபோன்று காவல்துறை செயல்படுவதாகவும், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற விடாமல் தொந்தரவு செய்வதாகவும் மஜ்லிஸ் கட்சி வேட்பாளர் முகமது அர்ஷத் குற்றம்சாட்டினார். இது மக்களின் தேர்தல் அல்ல, அரசாங்கத்தின் தேர்தல் என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்க்கிறோம் என்ற பெயரில் மக்களை வாக்களிக்க விடாமல் போலீசார் தடுப்பதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் சம்புல் ராணா குற்றம்சாட்டினார்.
மீராபூர் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத வெளியாட்களை அழைத்து வந்து கள்ள ஓட்டு போடப்படுவதாக தகவல் கிடைத்திருப்பதாக ராஷ்டிரிய லோக் தளம் வேட்பாளர் மித்லேஷ் பால், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"கள்ள ஓட்டு போடுபவர்கள் மதரஸாக்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, புர்கா அணிந்த பெண்கள் கள்ள ஓட்டு போடுகின்றனர். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க காவல்துறை சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்" என்றும் வேட்பாளர் மித்லேஷ் பால் வலியுறுத்தினார்.