
மத்திய மந்திரியின் மகளுக்கு பாலியல் தொல்லை... அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

மத்திய மந்திரியின் மகள் மற்றும் அவரது தோழிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பை,
மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டம் முக்தைநகரில் உள்ள கோதாலி கிராமத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி இரவு சிவராத்திரியை யொட்டி யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் பா.ஜனதாவை சேர்ந்த மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை இணை மந்திரியான ரக்ஷா கட்சேவின் மகள் மற்றும் அவரது தோழிகள் சிலர் கலந்துகொண்டனர். அப்போது, அங்கிருந்த சிறுவர்கள் குழுவால் மத்திய மந்திரியின் மகள் மற்றும் அவரது தோழிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மந்திரி ரக்ஷா கட்சே, முக்தைநகர் போலீஸ் நிலையத்தில் நேராக சென்று புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி ரக்ஷா கட்சே, "சிவராத்திரியை முன்னிட்டு கோதாலியில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு யாத்திரை ஏற்பாடு செய்யப்படுகிறது. யாத்திரையில் கலந்துகொண்ட என் மகளையும், அவருடைய தோழிகளையும் சிறுவர்கள் சிலர் பின்னால் இருந்து தள்ளி பாலியல் தொல்லை கொடுத்தனர். இதற்கு பாதுகாவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்களையும் தள்ளிவிட்டுள்ளனர். மேலும் இதனை அவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர்.
ஒரு எம்.பி. அல்லது மத்திய மந்திரியின் மகளுக்கே இதுபோன்ற விஷயங்கள் நடந்தால், சாதாரண பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள். நான் முதல்-மந்திரியிடமும், துணை போலீஸ் சூப்பிரண்டிடமும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பேசியுள்ளேன். நான் ஒரு மத்திய மந்திரியாக அல்ல, நீதி கேட்கும் ஒரு தாயாக வந்துள்ளேன்" என்று அவர் கூறினார்.
மேலும் எந்தவொரு அரசியல் அழுத்தத்தையும் மறுத்து, பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமிகளின் வீடியோக்களையும் வைத்துள்ளதால், ஐடி சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன.