உக்ரைனின் புதிய வெளியுறவு துறை மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
|பிரதமர் மோடி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகிய இருவரும் கலாசாரம், வேளாண்மை மற்றும் உணவு தொழில் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
புதுடெல்லி,
உக்ரைன் நாட்டின் புதிய வெளியுறவு துறை மந்திரியாக ஆண்டிரி சிபிஹா நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசிய மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர், அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.
இதுபற்றி எக்ஸ் ஊடகத்தில் அவர் வெளியிட்ட செய்தியில், உக்ரைனின் புதிய வெளியுறவு துறை மந்திரி ஆண்டிரி சிபிஹாவிடம் இன்று பேசினேன். அவருடைய நியமனத்திற்காக நான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டேன். அவருடன் பணியாற்ற காத்து கொண்டு இருக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
இதேபோன்று சிபிஹா வெளியிட்ட எக்ஸ் ஊடக பதிவில், ஒத்துழைப்புக்கான அனைத்து சாத்தியப்பட்ட பகுதிகளிலும் இருதரப்பு உறவுகளை முன்னெடுத்து செல்வது என நாங்கள் ஒப்பு கொண்டோம். ஐ.நா. பொது சபையை முன்னிட்டு பார்வைகளை நாங்கள் பரிமாறி கொண்டதுடன், அரசியல் பேச்சுவார்தைக்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஒத்துழைப்புடன் செயல்படுவது என முடிவு செய்தோம் என பதிவிட்டு உள்ளார்.
கடந்த ஆகஸ்டு 23-ந்தேதி உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் வைத்து, கலாசாரம், வேளாண்மை, உணவு தொழில், மருத்துவ தயாரிப்புகள் ஒழுங்குமுறை மற்றும் கலாசார ஒத்துழைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகிய இருவரும் பல்வேறு ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.