< Back
தேசிய செய்திகள்
வங்காளதேசத்தில் மனித உரிமை மீறல்கள்.. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இஸ்கான் வேண்டுகோள்
தேசிய செய்திகள்

வங்காளதேசத்தில் மனித உரிமை மீறல்கள்.. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இஸ்கான் வேண்டுகோள்

தினத்தந்தி
|
10 Dec 2024 6:00 PM IST

வங்காளதேசத்தில் மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் இஸ்கான் சேவை செய்து உணவளிப்பதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா:

வங்காளதேசத்தில் மத சிறுபான்மையினர் மீதான அட்டூழியங்களை ஐ.நா. அகதிகள் முகமை (ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்) கவனிக்க வேண்டும் என்றும், இத்தகைய மனித உரிமை மீறல்கள் மிகவும் வருத்தமளிப்பதாகவும் இஸ்கான் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இஸ்கான் செய்தித் தொடர்பாளர் ராதாரமண தாஸ் கூறியிருப்பதாவது:-

வங்காளதேசத்தில் உள்ள இடைக்கால அரசு, அந்நாட்டில் பிரச்சினைகளைத் தூண்டும் அடிப்படைவாதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பே விழித்தெழுங்கள்! குறைந்தபட்சம் இன்றாவது மனித உரிமைகள் தினத்திலாவது எழுந்திருங்கள். நடந்து கொண்டிருக்கும் வங்காளதேச மனித உரிமை மீறல்கள் குறித்து உங்கள் மவுனமும் பாராமுகமும் மனவேதனை அளிக்கிறது.

வங்காளதேசத்தில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளின் எம்.பி.க்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனாலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHCR) அந்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

உலகின் பல நாடுகளில் செய்வதைப் போலவே, வங்காளதேசத்திலும் மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் இஸ்கான் சேவை செய்து உணவளிக்கிறது. வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மற்றும் இஸ்கான் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மட்டுமே நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்