< Back
கல்வி/வேலைவாய்ப்பு
யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
கல்வி/வேலைவாய்ப்பு

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு

தினத்தந்தி
|
17 Oct 2024 9:52 PM IST

நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும், பி.எச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இத்தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) 2 முறை நடத்தப்படும்.

அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல் கட்ட நெட் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 19-ம் தேதி நடத்தப்பட்டது. ஆனால், இதில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது. அதன் பின் யுஜிசி நெட் மறுத்தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை சுமார் 9.08 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு தேர்வர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளுடன் பாட வாரியாக கட்-ஆப் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை தேர்வர்கள் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இது குறித்து ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 எனும் உதவி மைய எண் அல்லது ugcnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரி வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்