< Back
தேசிய செய்திகள்
தமிழக ஆசிரியர்கள் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது
தேசிய செய்திகள்

தமிழக ஆசிரியர்கள் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தினத்தந்தி
|
28 Aug 2024 9:28 AM IST

நாடு முழுவதும் 50 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியாகவும், இரண்டாவது ஜனாதிபதியாகவும் பணியாற்றியவர். ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறுகிறவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அந்த பட்டியலில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50 பேர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இதில் தமிழ்நாட்டில் இருந்து வேலூர் மாவட்டம் ராஜாக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆர். கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ரம்யா சேதுராமன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட ஆசிரியர்கள் டெல்லிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். வருகிற செப்டம்பர் 3-ந் தேதி மதியம் அவர்கள் டெல்லியில் உள்ள அசோக் ஓட்டலுக்கு வர வேண்டும் என்றும், 3 -ந் தேதி முதல் 6-ந் தேதி வரை அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 3- ந் தேதி மாலை 5 மணிக்கு விருது பெறுதல் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.50 ஆயிரம் பணத்துடன் வெள்ளிப் பதக்கம் கொண்டது ஆகும். விருது பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் செய்திகள்