மிசோரம் சிறையில் இருந்து 2 மியான்மர் பெண் கைதிகள் தப்பி ஓட்டம்
|மிசோரம் சிறையில் இருந்து தப்பியோடிய 2 கைதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ஐஸ்வால்,
கிழக்கு மிசோரமின் சம்பாய் மாவட்டத்தில் உள்ள சிறையில் இருந்து இரண்டு மியான்மரை சேர்ந்த பெண் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மியான்மரில் உள்ள சகாயிங் பிரிவை சேர்ந்த வான்சுயேசி என்ற சுயினுன்பெலி (36) மற்றும் சின் பகுதியின் காவ்மாவி கிராமத்தை சேர்ந்த லால்சன்மாவி (44) ஆகிய இரு பெண்களும், தகரத்தால் செய்யப்பட்ட சிறைக் கழிப்பறையிலிருந்து தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி சம்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஐஸ்வாலில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் இருந்து லால்சன்மாவி கடந்த ஆண்டு நவம்பரில் தப்பி சென்றார். பின்னர் மீண்டும் அவரை போலீசார் போதைப்பொருள் வழக்கில் சம்பையில் வைத்து கடந்த மே மாதம் கைது செய்தனர்.