கேரளா கோவில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
|கேரளா கோவில் தீ விபத்தில் மேலும் 2 பேர் நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரில் உள்ள அஞ்சுதம்பலம் வீரரேர்கவு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வாணவேடிக்கைகள் கடந்த மாதம் 28ம் தேதி நடத்தப்பட்டன.
கோவில் திருவிழா வாணவேடிக்கைகளின்போது கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி, குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு மூட்டைகளின் மீது விழுந்து எரிந்தது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் சின்னா பின்னமாக வெடித்து சிதறின.
கோவில் திருவிழாவில் வாணவேடிக்கையை ரசித்துக் கொண்டிருந்த பக்தர்களும் பொதுமக்களும் வெடித்துச் சிதறிய பட்டாசுகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டு அலறித் துடித்தனர். இந்த விபத்தில் 154 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 100 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காசர்கோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த தீ விபத்தில் ஏற்கனவே காயமடைந்த 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த பிஜூ (38), ஷிபின்ராஜ் (19) ஆகியோர் நேற்று இரவு உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.