2 பெண் நடன கலைஞர்களை துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம் செய்த கும்பல்
|2 பெண் நடன கலைஞர்கள் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோரக்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பெண் நடனக் கலைஞர்கள் ராம்கோலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று இரவு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் 2 பெண் நடனக் கலைஞர்களையும் வீட்டில் இருந்து கடத்தி சென்றனர். பின்னர் கப்தங்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 2 பெண் நடனக் கலைஞர்களையும் 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.
இதனையடுத்து அங்கிருந்து தப்பிய பெண் நடனக் கலைஞர்கள் தங்களுக்கு நேர்ந்த அவலம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடனக் கலைஞர்கள் கற்பழிக்கப்பட்ட வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். பின்னர் அந்த வீட்டில் இருந்த 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி (குஷிநகர்) சந்தோஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட 8 பேரும் 30 வயதுக்கு குறைவானவர்கள். குஷிநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு பெண்களின் வாக்குமூலங்கள் தற்போது மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களின் மருத்துவ பரிசோதனை முடிந்து அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்" என்று அவர் கூறினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விசாரணையின் போது, நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக தாங்கள் அவரது வீட்டில் இருந்ததாக கைதான நபர்கள் தெரிவித்தனர். குடித்துவிட்டு, நடன நிகழ்ச்சிக்கு ஆர்கெஸ்ட்ரா பார்ட்டியை அமர்த்த முடிவு செய்தனர். நேரம் தாமதமானதையடுத்து பெண்கள் நிகழ்ச்சியை நடத்த மறுத்ததால், அவர்கள் துப்பாக்கி முனையில் பெண்களை கடத்திச் சென்றனர்" என்று அவர்கள் கூறினார்.