< Back
தேசிய செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
தேசிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை

தினத்தந்தி
|
3 Aug 2024 9:27 AM IST

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல், வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். நாடு முழுக்க இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை. வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிகாரிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு விசாரித்தது. அப்போது அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த மனு தொடர்பாக மனுதாரர் ஹென்றி திபேன் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்