< Back
தேசிய செய்திகள்
உண்மை வென்றது: கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கருத்து
தேசிய செய்திகள்

உண்மை வென்றது: கெஜ்ரிவால் ஜாமீன் குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கருத்து

தினத்தந்தி
|
13 Sep 2024 8:53 AM GMT

கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உண்மையை ஒருபோதும் அடக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது என்று பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

சண்டிகார்,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இருந்து கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இறுதியாக உண்மை வென்றது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உண்மையை ஒருபோதும் அடக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்