வங்காளதேசத்தில் இந்திய பேருந்து மீது தாக்குதல் - திரிபுரா மந்திரி கண்டனம்
|வங்காளதேசத்தில் இந்தியாவைச் சேர்ந்த பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக திரிபுரா மந்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
அகர்தலா,
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து திரிபுரா மாநிலம் அகர்தலா வரை இயக்கப்படும் பேருந்துகள், வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா வழியாக செல்கின்றன. இந்த வழியாக செல்வதால் பயண தூரம் பாதியாக குறைகிறது. அதோடு வங்காளதேசத்திற்கு விமானம் மூலம் செல்வதை விட இந்த பயணம் செலவு குறைவானதாகவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் இருப்பதால் பெரும்பாலான மக்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வங்காளதேசம் வழியாக சென்ற இந்திய பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக திரிபுரா மாநிலத்தின் போக்குவரத்து துறை மந்திரி சுஷாந்தா சவுத்ரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திரிபுராவில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்று கொண்டிருந்த பேருந்து மீது வங்காளதேசத்தின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் உள்ள பிஷ்வா சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் அந்த பேருந்தில் இருந்த இந்திய பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக அந்த பேருந்தின் மீது ஒரு லாரி வேண்டுமென்றே மோதியுள்ளது. அப்போது முன்னால் சென்ற ஆட்டோ ரிக்ஷா மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து அங்குள்ள உள்ளூர் மக்கள், பேருந்தில் இருந்த இந்திய பயணிகளை மிரட்டியுள்ளனர். அவர்கள் இந்தியாவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதோடு, வெடிப்பொருட்களையும் வீசியுள்ளனர். இந்த சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வங்காளதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து திரிபுரா முதல்-மந்திரி மானிக் சாகா கூறுகையில், "அகர்தலா-கொல்கத்தா பேருந்து மீது வங்காளதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை விசாரித்து வருகிறோம். திரிபுரா மாநிலம் மூன்று புறங்களிலும் வங்காளதேசத்தால் சூழப்பட்டுள்ளதால், சர்வதேச எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என எல்லை பாதுகாப்பு படை மற்றும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.