கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
|போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர்.
இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதேபோல் கார்கில் பகுதியில் உள்ள டிராஸ் பகுதியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்த நிலையில், கார்கில் வெற்றி தினவிழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கார்கில் சென்றார். போர் நினைவிடம் சென்ற பிரதமர் மோடி, போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டமானது 4.1 கிமீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக அமைக்கப்படுகிறது.