பழங்காலத்தில் இருந்தே மூலிகைகளின் மருத்துவ பலன்களை அறிந்தவர்கள் பழங்குடியினர்; ஆனால்... ஜனாதிபதி வேதனை
|இந்தியாவில் இயற்பியல், ரசாயனம், வானவியல், ஜோதிடம், மருத்துவம், கணிதம் மற்றும் கட்டிட கலை ஆகியவற்றில் வளமான பாரம்பரியம் உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 3-ந்தேதி) முதல் 7-ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு, ஒடிசாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்து பூஜையிலும் பங்கு பெற்றார். இதன்பின்னர், இந்திய கடற்படை நாள் கொண்டாட்டத்திலும் பங்கேற்றார்.
கோபபந்து ஆயுர்வேத மகாவித்யாலயாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி முர்மு, பழங்காலத்தில் இருந்தே மூலிகைகளையும் மற்றும் அவற்றின் மருத்துவ பலன்களையும் நன்கு அறிந்தவர்களாக பழங்குடியினர் உள்ளனர். ஆனால் இந்த பாரம்பரிய அறிவு, மெல்ல மறைந்து வருகிறது என வேதனை வெளியிட்டார்.
இந்த கல்லூரியின் மாணவர்கள், ஆயுர்வேத சிகிச்சைக்கான நடைமுறையின் அறிவியல் அடிப்படையை பற்றி படித்து அறிந்து கொள்வார்கள். அதனால், இந்த பாரம்பரிய நடைமுறை அழிந்து விடாமல் அவர்கள் பாதுகாப்பார்கள் என்றும் கூறினார்.
தொடர்ந்து அவர், இந்தியாவில் இயற்பியல், ரசாயனம், வானவியல், ஜோதிடம், மருத்துவம், கணிதம் மற்றும் கட்டிட கலை ஆகியவற்றில் வளமான பாரம்பரியம் உள்ளது என்றும் பெருமிதத்துடன் கூறினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 40-வது பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்து கொள்ள இருக்கிறார்.