பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம்; 1,400 ஆண் பயணிகள் கைது
|பெண்களுக்கான ரெயில் பெட்டியில் பயணம் செய்து கைது செய்யப்படும் நபருக்கு எதிராக அபராதங்கள் மற்றும் சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கடந்த அக்டோபரில் கிழக்கு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரெயில்களின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த ஆண் பயணிகள் 1,400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன என மண்டல அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இவர்களில் 262 பயணிகள் ஹவுரா டிவிசனை சேர்ந்தவர்கள் ஆவர். 547 பேர் சீல்டா, 176 பேர் மால்டா மற்றும் 392 பேர் அசன்சோல் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். கைது செய்யப்படும் நபருக்கு எதிராக அபராதங்கள் மற்றும் சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்படும்.
பெண்கள் மட்டுமே பயணம் செய்ய கூடிய பெட்டியில் அல்லது பெண்களுக்கான சிறப்பு ரெயில்களில் பயணம் செய்ய வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என அந்த அதிகாரி கூறியுள்ளார். ஏதேனும் வசதி குறைவு ஏற்பட்டால், 139 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ரெயில்வே அதிகாரிகளிடம் பெண்கள் உதவி கோரலாம் என்றும் கூறியுள்ளார்.