உ.பி.யில் சோகம்: குடும்பத்தினர் 4 பேரை கொன்று, தற்கொலைக்கு முயன்ற நகை கடைக்காரர்
|உத்தர பிரதேசத்தில் விஷம் கலந்த உணவை கொடுத்து குடும்பத்தினர் 4 பேரை கொன்று விட்டு, தற்கொலைக்கு முயன்ற நகை கடைக்காரர் காப்பாற்றப்பட்டார்.
இடவா,
உத்தர பிரதேசத்தின் இடவா நகரை சேர்ந்தவர் முகேஷ் வர்மா. நகை கடை வைத்திருக்கிறார். இவருடைய மனைவி ரேகா. இந்த தம்பதிக்கு பவ்யா (வயது 22), காவ்யா (வயது 17) என 2 மகள்களும் மற்றும் அபிஷ்த் (வயது 12) என்ற மகனும் இருந்தனர். முகேஷ் 4 அடுக்குமாடிகளை கொண்ட வீட்டில் தன்னுடைய சகோதரர்களுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தினருடன் முகேஷுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியுள்ளது. இதனை தொடர்ந்து, மனைவி, மகள்கள் மற்றும் மகனுக்கு விஷம் கலந்த உணவை அவர்களுக்கு தெரியாமல் சாப்பிட கொடுத்துள்ளார்.
அதனை வாங்கி சாப்பிட்ட, அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டனர். இதுபற்றி இடவா காவல் துறை மூத்த கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறும்போது, குடும்பத்தினர் 4 பேரும் உயிரிழந்ததும், அவர்களின் உடல்களை முகேஷ் புகைப்படங்களாக எடுத்து, அதனை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்திருக்கிறார்.
இதனை பார்த்ததும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். இதில் வெவ்வேறு அறைகளில் உடல்கள் கிடந்துள்ளன என்றார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர், மருதர் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதற்கு முகேஷ் முயன்றுள்ளார். அவர் ரெயில் முன் பாய்ந்ததும், சுற்றியிருந்த மக்கள் அதனை பார்த்து கூச்சல் போட்டுள்ளனர். உடனடியாக ரெயில்வே போலீசார் நடைமேடையில் இருந்து ஓடி சென்று, அவரை வெளியே இழுத்து, மீட்டனர். இந்த சம்பவத்தில் முகேசுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.