உ.பி.யில் சோகம்: விபத்தில் புதுமண தம்பதி உள்பட 7 பேர் பலி
|உத்தர பிரதேசத்தில் மணமக்களை ஏற்றி வந்த வாகனம் விபத்தில் சிக்கியதில் புதுமண தம்பதி உள்பட 7 பேர் பலியானார்கள்.
பிஜ்னோர்,
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் புதிதாக திருமணம் முடிந்த மணமக்கள் வந்த வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. ஜார்கண்டில் நேற்று மாலை மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து, இன்று காலை பிஜ்னோரில் உள்ள தம்பூர் பகுதியில் அமைந்த மணமகனின் வீட்டுக்கு செல்வதற்காக புதுமண தம்பதி வாகனம் ஒன்றில் புறப்பட்டனர். அவர்களுடன் உறவினர்களும் இருந்தனர். இவர்களுடைய வாகனம், தேசிய நெடுஞ்சாலை 74-ல் வந்தபோது எதிரே வந்த டெம்போ மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், 2 வாகனங்களும் அருகேயிருந்த பள்ளம் ஒன்றில் கவிழ்ந்தன. மணமக்களின் வாகனத்தில் 11 பேர் வரை இருந்தனர். அவர்களில் மணமகள், மணமகன், அவருடைய சகோதரர் மற்றும் அத்தை ஆகியோரும் இருந்துள்ளனர். விபத்தில், மணமகள், மணமகன் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். காயம் அடைந்த மற்ற 2 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அடர்பனியால், தெளிவற்ற வானிலை காணப்பட்டது. இதனால், குறைந்த தொலைவே பார்க்க கூடிய சூழலில் இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து கொண்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டி கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.