'செல்பி' மோகத்தால் விபரீதம்.. நீர்வீழ்ச்சி பாறை இடுக்கில் சிக்கி விடிய, விடிய தவித்த கல்லூரி மாணவி
|கல்லூரி மாணவியை 12 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் மீட்டனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்த ஹம்ஷா (வயது 19) என்ற பெண், தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறை என்பதால் ஹம்ஷா தனது தோழிகளுடன் மந்தாரகிரி மலைப்பகுதியை சுற்றி பார்க்க சென்றார்.
அங்கு இயற்கை அழகை கண்டு ரசித்த அவர் பின்னர் அதே பகுதியில் இருந்த மிர்தாளகெரே ஏரியை பார்க்க சென்றார். அந்த ஏரியில் இருந்து வெளியேறிய நீர், பாறை இடுக்குகள் வழியாக நீர்வீழ்ச்சி போல் ஆர்ப்பரித்து விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றுலா வருவோர் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இதை பார்த்து ரசித்த ஹம்ஷா, நீர்வீழ்ச்சி நடுவே உள்ள பாறையில் நின்று 'செல்பி' எடுக்க முயன்றார். இதற்காக தனது தோழியையும் அழைத்து சென்றார்.
இருவரும் பாறையில் நின்று 'செல்பி' எடுத்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஹம்ஷா கால் தவறி கீழே விழுந்தார். அப்போது பாறை இடுக்கில் ஹம்ஷா சிக்கி கொண்டு உயிருக்காக போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த தோழி, கேத்தசந்திரா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ஹம்ஷாவை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீர்வீழ்ச்சியில் அதிகளவு தண்ணீர் வெளியேறியதால், அந்த நீர் பாறை இடுக்கில் விழாதப்படி மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். பின்னர் பாறை இடுக்கில் சிக்கிய ஹம்ஷாவை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். விடிய, விடிய இந்த மீட்பு பணிகள் நடந்தது. இதையடுத்து 12 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று காலை 6 மணி அளவில் போலீசார் ஹம்ஷாவை பத்திரமாக மீட்டனர். தற்போது அவர் துமகூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.