< Back
தேசிய செய்திகள்
ஆந்திர பிரதேசத்தில் நச்சு வாயு கசிவு:  ஒருவர் பலி; 9 பேருக்கு சிகிச்சை
தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேசத்தில் நச்சு வாயு கசிவு: ஒருவர் பலி; 9 பேருக்கு சிகிச்சை

தினத்தந்தி
|
28 Nov 2024 6:55 AM IST

ஆந்திர பிரதேசத்தில் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 9 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனகாபள்ளி,

ஆந்திர பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டத்தில் பரவடா பகுதியில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், திடீரென நச்சு வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 10 பேர் வரை மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். 9 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்து உள்ளார். அனகாபள்ளி மாவட்ட கலெக்டர் விஜய கிருஷ்ணன் மற்றும் ஆந்திர பிரதேச முன்னாள் மந்திரி மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குடிவடா அமர்நாத் ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன என கூறிய அமர்நாத், தீவிர கவனத்தில் கொண்டு, நிறுவனங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சம்பவ பகுதிக்கோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறவோ மந்திரிகள் யாரும் வந்து நான் பார்க்கவில்லை. இது அரசியல் விவகாரம் அல்ல. நிறுவனம் பின்பற்றும் விதிகளை அரசு கடுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்