திருப்பதி பிரமோற்சவ விழா: மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை
|திருப்பதி பிரமோற்சவ விழாவின்போது மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 4-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக தொடங்குகிறது. 12-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவில் 8-ந் தேதி கருட சேவை நடக்கிறது. கருட சேவைக்கான அனைத்து துறைகளின் ஏற்பாடு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக கேலரிகள் வசதி செய்யப்படுகிறது. மேலும் பிரத்யேக வாசல்களும் அமைக்கப்படுகின்றன. முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கருட சேவையையொட்டி 7-ந் தேதி இரவு 9 மணி முதல் 9-ந் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று இரவு கருட சேவை நடந்தது. நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 78,690 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 86 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத தரிசனம்: டோக்கன் பெறுவது எப்படி?
புரட்டாசி மாதம் இலவச தரிசனம் செய்ய விரும்புவோர் டோக்கன் பெறலாம்.
திருப்பதி ரெயில் நிலையம் எதிரில் விஷ்ணுநிவாஸ், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினசரி அதிகாலை 2 மணி முதல் டோக்கன் பெறலாம்.
டோக்கன் வாயிலாக அன்றோ அல்லது அடுத்த நாளோ குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி தரிசனம் செய்ய காலை 6 மணிக்கு தினசரி, 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன
முன்பதிவு தரிசன டிக்கெட்டுகள்
ஏழுமலையானை பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் 90 நாள்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ள வசதியாக தரிசன டிக்கெட்டுகளை ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்துக்கான இணையதள முன்பதிவு நேற்று தொடங்கியது.
முதலில் காலை 10 மணிக்கு திருமலை ஏழுமலையானின் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் மாத ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த சேவை டிக்கெட்டுகளை மின்னணு குலுக்கல் செய்வதற்கான ஆன்லைன் பதிவு நாளை காலை 10 மணி வரை செய்யலாம். பின்னர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நாளை முதல் 22-ம் தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தி தங்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கார சேவை டிக்கெட்டுகள் செப். 21ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அதேபோல் டிசம்பர் 21ம் தேதி மாலை 3 மணிக்கு விர்ச்சுவல் சேவைகள் மற்றும் அவற்றுக்கான தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது.
டிசம்பர் மாத அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு செப். 23ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீ வாரி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கான டிசம்பர் ஆன்லைன் ஒதுக்கீடு செப். 23ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக டிசம்பர் மாத இலவச சிறப்பு தரிசன டோக்கன்களின் ஒதுக்கீட்டை செப். 23 ம் தேதி மாலை 3 மணிக்கு தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஒதுக்கீடு செப். 24ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
திருமலை மற்றும் திருப்பதிக்கான டிசம்பர் மாத அறை ஒதுக்கீடு செப். 24ம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
ஸ்ரீவாரி சேவா கோட்டா செப். 27ம் தேதி காலை 11 மணிக்கும், நவநீத சேவை மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவை மதியம் 1 மணிக்கும் ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.