டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி... ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா கெஜ்ரிவால்?
|டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு தனித்து போட்டி என அறிவித்து, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே முழு அளவிலான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகராக உள்ள டெல்லியில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் ஆளுமையை செலுத்தும். இதில், ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதன் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் தேர்தலை முன்னிட்டு தீவிர பணியாற்றும்படி கட்சி தொண்டர்களை அறிவுறுத்தி உள்ளார்.
டெல்லியில் சட்டசபை தேர்தலில் அக்கட்சியின் வரலாற்றை எடுத்து கொண்டால், 2013-ம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த கெஜ்ரிவால், 49 நாட்களுக்கு பின்னர் பதவி விலகினார். இதன்பின்பு, 2015-ம் ஆண்டு தேர்தலிலும், 2020-ம் ஆண்டு தேர்தலிலும் ஆம் ஆத்மி அடுத்தடுத்து வெற்றி பெற்றது.
4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் அக்கட்சி விறுவிறுப்பாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளது. காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அறிவித்த அக்கட்சி, இந்த முறை தனித்து போட்டியிட்டு வெற்றியை கைப்பற்றும் நோக்கில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே முழு அளவிலான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டது.
டெல்லி சட்டசபை தேர்தலில் முழு பலத்துடன் களத்தில் இறங்க தயாராக வேண்டும் என்று ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஒற்றை இலக்க எண்களிலேயே பா.ஜ.க. வெற்றி பெற்ற சூழலில், காங்கிரசுக்கு தொகுதியே கிடைக்காத நிலை ஏற்பட்டது.
அதற்கு முந்தின தேர்தலில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. எனினும், அடுத்த தேர்தலில் 5 தொகுதிகளை இழந்தது. இது பா.ஜ.க.வுக்கான சாதக நிலையை காட்டுகிறது என்றபோதிலும், தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று, டெல்லியில் தற்போது ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி, இந்த முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது. இதற்காக கல்வி, சுகாதாரம் மற்றும் பல்வேறு நல திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. அது மக்களிடம் எந்த அளவுக்கு சென்றடைந்து, பதிலுக்கு பலனை தரும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விசயம்.
தேர்தலை முன்னிட்டு, அனைத்து வேட்பாளர்களும் அடங்கிய முழு பட்டியலை காங்கிரசும், ஆம் ஆத்மியும் முன்பே வெளியிட்டு விட்டன. ஆனால் பா.ஜ.க.வோ, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேர்தலில் போட்டியிடும் 29 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டது. இதில், புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக, முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவை அக்கட்சி இந்த தொகுதியில் நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் நிறுத்தப்பட்டு உள்ளார்.
இதேபோன்று கல்காஜி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் மற்றும் முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் அதிஷிக்கு எதிராக முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரியை பா.ஜ.க. நிறுத்தி உள்ளது. பிதூரி சமீபத்தில், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு எதிராக சில விசயங்களை பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
எனினும், பா.ஜ.க. ஒரு சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பற்றி முடிவு செய்ய வேண்டியுள்ளது. இதற்காக நேற்று இரவு பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் அடங்கிய கட்சி கூட்டம் ஒன்றும் நேற்று நடந்தது. இதில், மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் காங்கிரசும், ஆம் ஆத்மியும் எதிரெதிராக தேர்தலை எதிர்கொள்கிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணியாக கைகோர்த்து, தேர்தலை எதிர்கொண்டன. ஆனால், எம்.பி. தேர்தலில் ஒரு தொகுதியை கூட இந்த கூட்டணியால் கைப்பற்ற முடியவில்லை. 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் காணப்பட்ட நிலையே 2024-ம் ஆண்டு தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.
2 முறையும் அடுத்தடுத்து, பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இது இரு கட்சிகளின் கூட்டணியை மக்கள் விரும்பவில்லை என்ற நிலையை எடுத்து காட்டியுள்ளது. இதனால், உஷாரான ஆம் ஆத்மி இந்த தேர்தலில் தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது.
இது கூட்டணியில் ஒற்றுமையில்லாத நிலையையே காட்டுகிறது. இதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொது செயலாளர் டி. ராஜாவும் ஒப்பு கொண்டிருக்கிறார். எங்களுடைய ஒட்டுமொத்த முயற்சியும் மதசார்பற்ற, ஜனநாயக கட்சிகளை அனைத்து மட்டங்களிலும் ஒன்றிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும் என்பதே. இந்த கொள்கையை பாட்னாவில் நடந்த முதல் கூட்டத்தில் இருந்து நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம் என்றார்.
எனினும், வரவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இடது சாரிகளும் எந்தெந்த இடங்களில் தங்களுடைய வலிமையை வெளிப்படுத்த முடியுமோ அந்த இடங்களில் போட்டியிடுகிறது என கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியிலுள்ள இரு கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதுபற்றி கூட்டணியை சேர்ந்த மற்றொரு கட்சியான ராஷ்டீரிய ஜனதாதளத்தின் தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி யாதவ் கூறும்போது, மக்களவை தேர்தலுக்காக மட்டுமே இந்தியா கூட்டணி என முன்பே முடிவு செய்யப்பட்டது என செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆம் ஆத்மிக்கு திரிணாமுல் காங்கிரசும், சமாஜ்வாதியும் ஆதரவு அளித்துள்ளன. இதேபோன்று, உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவும் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. பா.ஜ.க.வுக்கு முதல்-மந்திரி வேட்பாளர் யாரென்று அறிவிப்பது சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. காங்கிரசிலும் முதல்-மந்திரி வேட்பாளர் யாரென ஆவலாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், டெல்லி சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஆகும். வாக்கு பதிவு பிப்ரவரி 5-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதியும் நடைபெறும். அதில், நாட்டின் தலைநகர் டெல்லியில், மக்கள் யாருக்கு ஆதரவை தர போகின்றனர்? என்பதும், யாரை முதல்-மந்திரியாக பார்க்க விரும்புகிறார்கள்? என்ற விவரம் தெரிய வரும்.