மராட்டியத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
|கார் ஆற்றில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.
மும்பை,
மேற்கு மராட்டியத்தின் சாங்லி மாவட்டத்தில் வசிக்கும் 6 பேர் கோலாப்பூரில் நிகழ்ந்த திருமணத்தில் கலந்துகொண்டு விட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது நள்ளிரவு 12.30 மணியளவில் கிருஷ்ணா ஆற்றின் பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் பற்றி தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிருஷ்ணா ஆற்றின் பழைய பாலம் வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு இருந்த இரண்டு பாலங்களுக்கு இடையே விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பிரசாத் பால்சந்திர கேடேகர் (35), அவரது மனைவி பிரேரனா (36) மற்றும் வைஷ்ணவி சந்தோஷ் நர்வேகர் (21) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் சமர்ஜீத் பிரசாத் கேடேகர் (7), வரத் சந்தோஷ் நர்வேகர் (19), சாக்ஷி சந்தோஷ் நர்வேகர் (42) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.