மத்திய பிரதேசத்தில் மின் கோபுரம் சரிந்து விபத்து: 3 தொழிலாளர்கள் பலி
|மத்திய பிரதேசத்தில் உயர்மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் 400 கிலோவோல்ட் உயர்மின் கோபுரம் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தின் ஆம்தாத் கிராமத்தில் மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சித்தி காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா கூறுகையில், "தொழிலாளர்கள் பழைய உயர்மின் கோபுரங்களை புதியதாக மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு உயர்மின் கோபுரம் திடீரென தொழிலாளர்கள் குழுவின் மீது சரிந்து விழுந்தது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேரும் அருகில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என்றார்.