மும்பை போலீஸ் உதவி எண்ணில் பிரதமர் மோடிக்கு வந்த கொலை மிரட்டல்
|பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் மும்பை போலீஸ் உதவி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
மும்பை,
மும்பை போலீஸ் போக்குவரத்து பிரிவின் உதவி எண்ணிற்கு நேற்று வாட்ஸ்ஆப் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், 2 ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பியவரின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குறுஞ்செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், அல்லது மதுபோதையில் இருந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை காவல்துறையின் உதவி எண்ணிற்கு ஏற்கனவே இதுபோன்ற மிரட்டல் குறுஞ்செய்திகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.