'சாதி பற்றி தெரியாதவர்கள்...' - ராகுல் காந்தி, அனுராக் தாக்கூர் இடையே மக்களவையில் காரசார விவாதம்
|நாடாளுமன்ற மக்களவையில் ராகுல் காந்தி, அனுராக் தாக்கூர் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மத்திய பட்ஜெட் குறித்து கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், இன்று மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவாதம் நடந்தது. அப்போது ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில், பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் பேசினார்.
அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின்போது பல்வேறு ஊழல்கள் நடந்ததாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அனுராக் தாக்கூர், "மக்களவை எதிர்க்கட்சி தலைவர், உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புவதை நிறுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அதிகம் பேசப்படுகிறது. சாதி பற்றி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்" என்றார்.
அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க. எம்.பி. தன்னை அவமதித்து விட்டதாகவும், தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ராகுல் காந்திக்கு பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பேசிய அவர், "அனுராக் தாக்கூர் என்னை அவமதித்துள்ளார், அவதூறாக பேசியுள்ளார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் தொடர்ந்து போராடுவேன்.
தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பேசுபவர்களும், அவர்களுக்காக போராடுபவர்களும் அவமதிக்கப்படுகின்றனர். மகாபாரதத்தில் அர்ஜுனன் தனது அம்பின் இலக்கான மீனின் கண்ணை தவிர வேறு எதையும் காணாததைப் போல், நானும் சாதிவாரி கணக்கெடுப்பு என்ற இலக்கை மட்டுமே காண்கிறேன்.
நீங்கள் தினமும் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அவமதிக்கலாம். ஆனால் நாங்கள்(எதிர்க்கட்சிகள்) இங்கே (நாடாளுமன்றத்தில்) சாதிவாரி கணக்கெடுப்பு மசோதாவை நிறைவேற்றுவோம் என்பதை மறந்துவிடாதீர்கள்."
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.