< Back
தேசிய செய்திகள்
தோல்வி அடைந்ததும் ராகுல் காந்தி இதைத்தான் சொல்லப்போகிறார்: அமித்ஷா
தேசிய செய்திகள்

தோல்வி அடைந்ததும் ராகுல் காந்தி இதைத்தான் சொல்லப்போகிறார்: அமித்ஷா

தினத்தந்தி
|
30 May 2024 9:43 AM IST

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி போட ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோர் முடிவு செய்துவிட்டதாக அமித்ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்குள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் பா.ஜனதா வேட்பாளர் பங்கஜ் சவுத்ரியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.தனது உரையில் அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடக்கிறது. அன்று பிற்பகலில் 2 இளவரசர்கள் (ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ்) இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள்.அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களால் நாங்கள் தோற்று விட்டோம் என கூறுவார்கள். தங்கள் தோல்விக்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி போட முடிவு செய்து இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலின் முதல் 5 கட்டங்களிலேயே பிரதமர் மோடி 310 இடங்களை கடந்து விட்டார். ராகுல் பாபா, நீங்கள் 40 இடங்களை கூட பெற மாட்டீர்கள். மற்றொரு இளவரசருக்கு (அகிலேஷ் யாதவ்) வெறும் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.எதிர்க்கட்சிகளிடம் ஒரு பிரதமர் வேட்பாளர் இல்லை. அவர்கள் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை வைத்திருப்பார்கள்.இது ஒன்றும் பொது ஸ்டோர் இல்லை, 130 கோடி மக்கள் வாழும் ஒரு நாடு. அப்படி ஒரு பிரதமர் பணியாற்ற முடியுமா?

பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் பா.ஜனதாவினருக்கு அணுகுண்டுகளை கண்டு பயம் இல்லை.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். நாங்கள் அதை எடுத்து விடுவோம்.அகிலேஷ் யாதவ் ஆட்சியில்தான் சகாரா சிட்பண்ட் ஊழல் நடந்தது. மோடிஜிதான் அந்த பணத்தை மக்களுக்கு திரும்ப வழங்கும் பணிகளை தொடங்கினார்" இவ்வாறு அமித்ஷா கூறினார்.

மேலும் செய்திகள்