< Back
தேசிய செய்திகள்
அவர்கள் எங்களை தடுத்து, தள்ளி விட்டனர்; பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி விளக்கம்
தேசிய செய்திகள்

அவர்கள் எங்களை தடுத்து, தள்ளி விட்டனர்; பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி விளக்கம்

தினத்தந்தி
|
19 Dec 2024 1:56 PM IST

நாடாளுமன்ற நுழைவாயில் வழியே உள்ளே செல்ல முயன்ற என்னை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்து நிறுத்த முயன்றதுடன், தள்ளி விட்டு, அச்சுறுத்தலும் ஏற்படுத்தினர் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அரசியல் சாசனம் மீது மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நடந்த சிறப்பு விவாதத்தின்போது, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அம்பேத்கர் பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று இரு அவைகளும் முடங்கின.

நாடாளுமன்றம் இன்று காலை கூடியதும் இரு அவைகளிலும் அம்பேத்கர் விவகாரம் இன்றும் எழுப்பப்பட்டது. இதனால், அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் முடங்கின. எதிர்க்கட்சிகள் அமளியால், இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

இந்த சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில், அம்பேத்கர் விவகாரத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான பிரதாப் சந்திர சாரங்கிக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தள்ளிவிட்டார். அதனால், இந்த காயம் ஏற்பட்டது என அவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ராகுல் காந்தி தள்ளி விட்டார். அவர் என் மீது விழுந்ததில், நான் கீழே விழுந்தேன். நான் படிக்கட்டு பகுதியில் நின்றிருந்தேன்.

அப்போது வந்த ராகுல் காந்தி, முன்னால் இருந்த எம்.பி. ஒருவரை தள்ளி விட்டதில் அவர் என் மீது விழுந்து விட்டார் என கூறியுள்ளார். இதனால், சாரங்கியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்து உள்ளார். இதுபற்றி ராகுல் காந்தி கூறும்போது, இது உங்கள் கேமராவில் பதிவாகி இருக்கலாம். நான் நாடாளுமன்ற நுழைவாயில் வழியே உள்ளே செல்ல முயன்றேன். ஆனால், பா.ஜ.க. எம்.பி.க்கள் என்னை தடுத்து நிறுத்த முயன்றனர். என்னை தள்ளி விட்டு, அச்சுறுத்தலும் ஏற்படுத்தினர். இதுவே நடந்தது. ஆம், மல்லிகார்ஜுன கார்கேவும் தள்ளி விடப்பட்டார் என கூறினார்.

அவர்கள் எங்களை நெருக்கி தள்ளியதில் நாங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால், இதுவே நுழைவாயில். இந்த வழியேதான் நாங்கள் உள்ளே செல்ல வேண்டும். அதற்கான உரிமை எங்களுக்கு உள்ளது என கூறியுள்ளார். நாங்கள் உள்ளே செல்ல விடாமல் பா.ஜ.க. எம்.பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்த முயன்றனர் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதில், அரசியலமைப்பை பா.ஜ.க. தாக்கி வருகிறது என்ற முக்கிய விசயம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அம்பேத்கரின் நினைவை புண்படுத்தி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பின்பு, காயமடைந்த சாரங்கியை ராகுல் காந்தி நேரில் சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்