எங்களை முஸ்லிம் கட்சி என்றார்கள்; இந்து ஒருவரை துணை முதல்-மந்திரி ஆக்கியிருக்கிறோம்: உமர் அப்துல்லா
|ஜம்மு மற்றும் காஷ்மீரில் உமர் அப்துல்லா முதல்-மந்திரியாகவும், அக்கட்சியை சேர்ந்த சுரீந்தர் குமார் சவுத்ரி துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, ஜம்முவில் கட்சி தொண்டர்களிடையே இன்று பேசினார். அவர் பேசும்போது, கடந்த தேர்தலின்போது, தேசியவாத மாநாட்டு கட்சி முஸ்லிம்களுக்கான கட்சி என எல்லோரும் கூறி வந்தனர். இது காஷ்மீரிகளுக்கான ஓர் அமைப்பு என்றும் கூறினர்.
ஆனால், ஜம்முவில் இருந்து ஒருவரை துணை முதல்-மந்திரியாக ஆக்கியிருக்கிறோம். அவர் ஓர் இந்து. அவர்கள் தற்போது என்ன கூறுவார்கள்? என்று பேசியுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் மற்றும் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும்.
இதில், தேசியவாத மாநாட்டு கட்சி 42 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. ஜம்முவின் அனைத்து பகுதிகளிலும் அக்கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
பெரும்பான்மை இடங்களை கைப்பற்றிய தேசியவாத மாநாட்டு கட்சியை சேர்ந்த உமர் அப்துல்லா முதல்-மந்திரியாகவும், அக்கட்சியை சேர்ந்த சுரீந்தர் குமார் சவுத்ரி, துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர்.