விசாரணை அமைப்புகளுக்கு பயந்துதான் பாஜகவுக்கு செல்கின்றனர்: மல்லிகார்ஜுன கார்கே
|மோடி பிரதமர் ஆகவில்லை என்றால் டீ விற்றுக்கொண்டு இருந்திருப்பார் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-
பாஜக தலைவர்கள் ஏற்கனவே சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகின்றனர். அதை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு செல்வதற்காக "பிரிந்தால் நாம் வீழ்வோம்" போன்ற முழக்கங்களை எழுப்புகின்றனர். மராட்டியத்தில் திருட்டு மற்றும் மிரட்டல் மூலம் ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசை தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே இந்த சட்டசபை தேர்தல் முக்கியமானது. எங்கள் பக்கம் இருந்து பா.ஜனதா கூட்டணியில் சேருபவர்கள் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு பயந்துதான் அங்கு செல்கின்றனர். குஜராத்தில் 24 ஆண்டுகளாக ஒரு நபரின் ஆட்சி தான் நடக்கிறது. ஆனால் அந்த மாநிலத்தில் ஏன் இன்னும் வறுமை ஒழியவில்லை. காங்கிரஸ் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்ததால் தான் மோடி பிரதமரானார். இல்லையென்றால் டீ விற்றுக்கொண்டு இருந்திருப்பார்.
பிரதமர் மோடி ஒரு சில பணக்காரர்களுக்காக தான் வேலை செய்கிறார். அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் விவசாயிகள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவவில்லை. பணமதிப்பிழப்பு ஏழை மக்களை கொன்றது. பா.ஜனதாவின் பொய் பிரசாரங்களுக்கு பொதுமக்கள் வீழ்ந்து விட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.