< Back
தேசிய செய்திகள்
கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் நான் பங்கேற்றதில் அரசியல் இல்லை: டி.கே.சிவக்குமார்
தேசிய செய்திகள்

கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் நான் பங்கேற்றதில் அரசியல் இல்லை: டி.கே.சிவக்குமார்

தினத்தந்தி
|
28 Feb 2025 9:53 AM IST

கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் நான் பங்கேற்றதில் அரசியல் இல்லை கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கவர்னர்கள் ஹரிபாபு கம்பம்பதி (ஒடிசா), குலாப் சந்த் கட்டாரியா (பஞ்சாப்), கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மத்திய மந்திரி எல்.முருகன், புதுச்சேரி மாநில உள்துறை மந்திரி நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் சந்தானம், நடிகைகள் தமன்னா, நிக்கி கல்ராணி மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்றது குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கோவை ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதை வைத்து பலர் தங்களின் கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனக்கு நம்பிக்கை உள்ள இடத்திற்கு நான் செல்கிறேன். காங்கிரஸ் அனைவரையும் அரவணைத்து செல்கிறது. ஈஷா மையத்திற்கு நான்சென்றதில் அரசியல் இல்லை. மதத்தில் அரசியலை கலக்கக்கூடாது.

நான் எனது தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக ஈஷா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இதுகுறித்து விமர்சிப்பவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது மதத்தை நேசிக்கிறேன். நாடாளுமன்றத்தில் மூன்றில் 2 பங்கு மெஜாரிட்டி இருந்தால் தான் தொகுதி மறுவரையறை செய்ய முடியும். ஆனால், மத்தியில் தற்போது உள்ள அரசுக்கு அத்தகைய மெஜாரிட்டி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்