< Back
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த சதி நடந்துள்ளது - ஜெய்ராம் ரமேஷ்
தேசிய செய்திகள்

'மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த சதி நடந்துள்ளது' - ஜெய்ராம் ரமேஷ்

தினத்தந்தி
|
23 Nov 2024 9:16 PM IST

மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த சதி நடந்துள்ளது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களத்தில் இறங்கின.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில், பா.ஜ.க. தலைமையிலான ஆளும் 'மகாயுதி கூட்டணி' பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளது. இதன்படி பா.ஜ.க. 132 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களிலும், துணை முதல்-மந்திரி அஜித் பவார் தலைமையிலான தேசியவார காரங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றியை உறுதி செய்துள்ளன.

அதே சமயம் 'மகாவிகாஸ் அகாடி' கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) 10 இடங்களிலும் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த சதி நடந்துள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "இந்த முடிவு குறித்து நிச்சயம் ஆய்வு செய்வோம். ஆனால், இன்று வெற்றி பெற்றவர்கள் கூட தங்கள் வெற்றியை கணித்திருக்க மாட்டார்கள் என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற எண்ணம் இருந்தது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் கோபமாக இருக்கின்றனர். உழைக்கும் வர்க்கத்தினர் அரசுக்கு எதிராக இருக்கின்றனர்.

ஆனால் தேர்தல் முடிவு இதற்கு நேர்மாறாக இருக்கிறது. ஆனால் இதனால் எங்கள் கொள்கையில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். எங்களை வீழ்த்த சதி நடந்துள்ளது. மராட்டிய தேர்தல் முடிவு விசித்திரமாக இருக்கிறது என்பதை மட்டுமே தற்போது என்னால் சொல்ல முடியும்" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்