இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 நீதிபதிகள் வீதம் உள்ளனர் - மத்திய அரசு தகவல்
|இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 பேர் என்ற வீகிதத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில், நாட்டில் உள்ள ஐகோர்ட்டுகளில் மொத்தம் 368 காலி பணியிடங்கள் உள்ளதாகவும், அதிகபட்சமாக அலகாபாத் ஐகோர்ட்டில் 79 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 9-ந்தேதி நிலவரப்படி மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் துணை நீதிமன்றங்களில் 5,262 நீதித்துறை அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 996 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். அதே போல், 2014-ல் 19,518 ஆக இருந்த நீதித்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை தற்போது 25,741 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் தொகை-நீதிபதிகள் விகிதத்தை பொறுத்தவரை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 10 லட்சம் மக்களுக்கு 21 பேர் என்ற விகிதத்தில் நீதிபதிகள் உள்ளனர் என்று அவர் கூறினார். டிசம்பர் 9-ந்தேதி நிலவரப்படி சுப்ரீம் கோர்ட்டில் 33 நீதிபதிகள் உள்ளதாகவும், 1 நீதிபதிக்கான பணியிடம் காலியாக உள்ளதாகவும் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.