ஒயின் சலித்து விட்டது; இந்தியாவில் விஸ்கிக்கு மாறி வரும் பெண்கள்...
|நாட்டில், விஸ்கி உள்பட ஆடம்பர ரக ஸ்பிரிட் வகை மதுபானங்களை பெண்கள் குடிப்பது என்பது கடந்த 2 ஆண்டுகளில் 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் மருத்துவராக உள்ள பெண் ஒருவர் மகனை அழைத்து கொண்டு விருந்துக்கு சென்றிருக்கிறார். கரீமா என்ற அந்த பெண் மருத்துவர், பணியாளரிடம் காக்டெயில் (ஆல்கஹால் கலந்த பழரசம்) மற்றும் விஸ்கி ஆகியவற்றுக்கு ஆர்டர் செய்து விட்டு காத்திருந்து உள்ளார். பணியாளர் காக்டெயில் கிளாசை கொண்டு வந்து பெண் மருத்துவரின் அருகே வைத்து விட்டு, அவருடைய மகன் அருகே விஸ்கியை வைத்திருக்கிறார்.
அப்போது, அந்த பெண் கிளாசை இடம் மாற்றி வையுங்கள் என கூறி மகனை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். அந்த பணியாளரும் திகைத்து விட்டார். ஆனால், விஸ்கி தயாரிப்பாளர்களுக்கு இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஏனெனில், தொழில் ரீதியாக பணபலம் படைத்த, செலவு செய்யும் திறன் படைத்த பெண்கள் பலரும் விஸ்கியை சுவைத்து பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.
இதனால், இந்தியாவில் விஸ்கியில் ஆர்வம் செலுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என தரவு தெரிவிக்கின்றது. இதுபற்றி டையாஜியோ இந்தியா என்ற அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் விஸ்கி விற்பனை அதிகரித்து இருப்பதில் 64 சதவீதம் அளவுக்கு பெண்களுக்கே பங்கு உள்ளது என தெரிவிக்கின்றது.
இதுபற்றி இந்தியாவின் ஸ்பிரிட்ஸ் என்ற செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் பிஷன் குமார் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் விஸ்கி குடிக்கும் பெண்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்து காணப்படுகிறது. முன்பு எல்லாம் விருந்து நிகழ்ச்சிகளில், பெருமளவிலான பெண்கள் ஒயின் மற்றும் குறைந்த ஆல்கஹால் அளவு கொண்ட பானங்களை அருந்தி வந்தனர் என்றார்.
இதேபோன்று, டையாஜியோ இந்தியாவின் தலைமை அதிகாரி ருச்சிரா ஜெட்லி கூறும்போது, கடந்த 2 ஆண்டுகளில் விஸ்கி உள்பட ஆடம்பர ரக ஸ்பிரிட் வகை மதுபானங்களை பெண்கள் குடிப்பது என்பது 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரித்து உள்ளது. விஸ்கி சார்ந்த காக்டெயில்களை விரும்பி வாங்கும் பெண் நுகர்வோர்களின் எண்ணிக்கை கணிச அளவில் அதிகரித்து உள்ளது என்று கூறுகிறார். இதற்கேற்ப இந்தியாவில் விஸ்கி கிளப்புகளில் அதிகளவில் பெண்களும் இணைந்து வருகிறார்கள்.
காக்டெயில் மற்றும் பிற பானங்களை கலந்து தருவதில் நிபுணரான ஷாத்பி பாசு கூறும்போது, ஆண்கள் அதிக அளவில் வெள்ளை ஸ்பிரிட் மற்றும் காக்டெயிலுக்கு மாறி வருகின்றனர். பெண்களோ விஸ்கியை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர் என எழுத்தாளராகவும் உள்ள அவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்.
நல்ல முறையிலான விஸ்கியை சரியான வழியில் சுவைத்து பார்ப்பது அதன் நறுமண பண்புகள் மற்றும் மற்றவற்றில் இருந்து எப்படி வேறுபடுகிறது என அறிந்து கொள்வதில் உங்களுக்குள் ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்தும் என அவர் கூறுகிறார்.
இந்தியாவில் மதுபானம் பரிமாறும் பணியாளருக்கான முதல் பெண் என அறியப்படுபவர் பாசு. இதற்காக ஜனாதிபதியிடம் இருந்து விருதும் பெற்றுள்ளார். மதுபானம் சார்ந்த பல புத்தகங்களையும் படைத்திருக்கிறார்.
இந்தியாவில், பெண்கள் நிதியை கையாளும் வகையில் சுதந்திரம் பெற்றவர்களாகவும், அதிக வருவாயை பெறுபவர்களாகவும் இருப்பது பல தடைகளை உடைத்து வெளியே வர முடிகிறது. சமூக மாற்றத்தின் ஒரு பகுதியாக பெண்கள் உருவெடுத்து வரும் சூழலில், நாட்டில் பெண்கள் பலர் விஸ்கிக்கு மாறியுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மேற்கத்திய கலாசாரம் ஒருபுறம் ஊடுருவி பரவி வருகிறது என கூறப்பட்டு வரும் சூழலில், குடும்பத்தின் தூண்களாக இருக்க வேண்டிய பெண்களின் பலரது கைகளில் விஸ்கி கோப்பைகள் காணப்படுகின்றன என்ற தகவல் மறுபுறம் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் உள்ளது.