ஸ்டைலாக முடி வெட்டி வந்த கல்லூரி மாணவருக்கு மொட்டை போட்ட பேராசிரியர்... பாய்ந்தது வழக்கு
|தெலுங்கானாவில் கல்லூரி மாணவருக்கு பேராசிரியர் மொட்டை போட்ட விவகாரத்தில், பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சுகாதார மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.
கம்மம்,
தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர், சீன இளைஞர்களை போன்று ஸ்டைலாக தலைமுடியை வெட்டி கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளார்.
இதனை பார்த்த கல்லூரி விடுதியில் உள்ள மூத்த மாணவர்கள் அவரிடம், இதுபோன்று முடி வெட்டி கொண்டு கல்லூரிக்கு வர கூடாது என்றும், மருத்துவ மாணவருக்கு இது சரியல்ல என்றும் கூறி, தலைமுடியை சீராக வாரும்படி முடி வெட்டி வரவும் என கூறியுள்ளனர். இதனால், அவர் முடியை வெட்டி குறைத்திருக்கிறார்.
இந்நிலையில், அந்த விடுதியின் ராகிங் ஒழிப்பு கமிட்டியின் அதிகாரியான உதவி பேராசிரியர் ஒருவர் அந்த மாணவரிடம், முடி வெட்டியிருப்பது தனித்து காட்டுகிறது என கூறி, அவரை முடி வெட்டும் கடைக்கு அழைத்து சென்று, மொட்டையடிக்க செய்துள்ளார். இந்த விசயம் தெரிந்ததும் கடும் விமர்சனம் எழுந்தது. விடுதி பணியில் இருந்து அந்த உதவி பேராசிரியரை விடுவிக்கும்படி கல்லூரியின் அதிகாரிகளுக்கு நெருக்கடி அதிகரித்தது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, புதிய குற்றவியல் சட்டம், ராகிங் ஒழிப்பு, எஸ்.சி. மற்றும் எஸ்.டி. உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தனர். தெலுங்கானா சுகாதார மந்திரி தாமோதர் ராஜா நரசிம்மா இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டு உள்ளார். எனினும், இது ராகிங் அல்ல என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.