< Back
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட் பஸ் விபத்தில் 36 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பஸ் விபத்தில் 36 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

தினத்தந்தி
|
4 Nov 2024 3:10 PM IST

உத்தரகாண்ட் பஸ் விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரகாண்டின் அல்மோரா மாவட்டத்தில் பவுரி என்ற இடத்தில் இருந்து ராம்நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ், அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலா என்ற இடத்தில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்து இன்று (நவ.4) காலை நடந்துள்ளது.

இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், ஒருவர் ராம்நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்ததாகவும் அல்மோரா மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி வினீத் பால் தெரிவித்துள்ளார்.

விபத்தை அடுத்து காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"அல்மோரா மாவட்டத்தின் மார்ச்சுலாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான பஸ் விபத்தில் பயணிகளின் உயிரிழப்பு பற்றிய மிகவும் வருத்தமான செய்தி கிடைத்தது. நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், உத்தரகாண்ட் பஸ் விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோராவில் நடந்த பஸ் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்