சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டிய நபருக்கு 20-ந்தேதி வரை காவல்
|நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டியவரை 20-ந்தேதி வரை மும்பை குற்றப்பிரிவு போலீசாரின் காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை,
நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டிய நபரை மும்பை போலீசார் கடந்த 16-ந்தேதி கைது செய்துள்ளனர். அந்நபர் பன்வாரிலால் லத்தூர்லால் குஜ்ஜார் (வயது 25) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
நடிகர் சல்மான் கானை, பிஷ்னோய் கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டியிருந்தது என்ற தகவலை யுடியூப் சேனல் ஒன்றில் குஜ்ஜார் குறிப்பிட்டு இருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்திய போலீசார், ராஜஸ்தானின் போர்டா கிராமத்தில் வைத்து குஜ்ஜாரை கைது செய்தனர். பின்பு, விசாரணை செய்வதற்காக மும்பைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
மும்பையில் உள்ள சவுத் சைபர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்தது.
நடிகர் சல்மான் கான், அவருடைய சகோதரர் அர்பாஸ் கான் ஆகியோரிடம் கடந்த 4-ந்தேதி போலீசார் விசாரணை செய்தனர். அப்போது, கடந்த ஏப்ரல் 14-ந்தேதி நடந்த துப்பாக்கி சூடு பற்றி இருவரும் போலீசிடம் வாக்குமூலம் அளித்தனர்.
இதில், நடிகர் சல்மான் கான் 4 மணிநேரமும், அர்பாஸ் கான் 2 மணிநேரமும், வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுபற்றி நடிகர் சல்மான் கான் கூறும்போது, வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது வீட்டிலேயே இருந்தேன். பின்பு படுத்து விட்டேன்.
இரவில் தூங்கி கொண்டிருந்தபோது, துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தேன் என்றார். இந்த சம்பவம் அதிர்ச்சிக்குரியது என குறிப்பிட்ட அவர், மும்பை போலீசாரின் விசாரணைக்காக தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம் மும்பை நகரின் பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. கடந்த ஏப்ரல் 14-ந்தேதி, இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், குடியிருப்பின் வெளிப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர்.
இதனை தொடர்ந்து அவரது வீடு முன்பு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்த சம்பவத்தில், துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் இருவரை குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்தபோது போலீசார் கைது செய்தனர். அவர்கள் விக்கி குப்தா, சாகர் பால் என அடையாளம் காணப்பட்டனர். இதேபோன்று, அனுஜ் தபன் மற்றும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர். வழக்கில், மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், மும்பை போலீசார் கூறும்போது, போலீஸ் காவல் முடிவடைந்ததும், கோர்ட்டில் குஜ்ஜார் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து, நாளை மறுநாள் (ஜூன் 20) வரை மும்பை குற்றப்பிரிவு போலீசாரின் காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது என தெரிவித்தனர்.