< Back
தேசிய செய்திகள்
நாடு கடத்தல் விவகாரம்; இந்திய ராஜதந்திரத்திற்கு ஒரு பெரிய சவால் - ப. சிதம்பரம் டுவிட்
தேசிய செய்திகள்

நாடு கடத்தல் விவகாரம்; இந்திய ராஜதந்திரத்திற்கு ஒரு பெரிய சவால் - ப. சிதம்பரம் டுவிட்

தினத்தந்தி
|
15 Feb 2025 10:56 AM IST

அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை நாடு கடத்தும் விவகாரம் பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் வலைதளத்தில் சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி இதற்காக நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அமெரிக்காவின் எல்லை வழியே அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சட்டவிரோத வகையில் அந்நாட்டுக்குள் புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.

இதன்படி, அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை சேர்ந்த சட்டவிரோத குடியேறிகள் 104 பேரை அமெரிக்கா திருப்பி அனுப்பியது. இதன்படி, கடந்த 5-ந்தேதி அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் அவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அப்போது, இந்தியர்களின் கைகளில் விலங்கு போடப்பட்டு அழைத்து வரப்பட்டனர் என்றும் அவர்களின் கால்கள் கயிறால் கட்டப்பட்டு இருந்தன என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. எனினும், அமெரிக்காவால் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் நடைமுறை இது என மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது.

இந்த சூழலில், சட்டவிரோத குடியேறிகளாக இருந்த 119 இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து இன்று சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். அவர்களை அமெரிக்கா இன்று நாடு கடத்துகிறது.

இந்நிலையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் இந்த விவகாரம் பற்றி எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள பதிவில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை இந்தியாவுக்கு அமெரிக்க அரசு திரும்ப அனுப்புகிறது. அமெரிக்க விமானம் 119 இந்தியர்களை இன்று கொண்டு வருகிறது. அந்த 119 இந்தியர்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட்டார்களா? என்பதே கேள்வி.

அவர்கள் கைகளில் விலங்கு போடப்பட்டதா? அவர்கள் கால்கள் கயிறால் பிணைக்கப்பட்டதா? இந்திய ராஜதந்திரத்திற்கு பெரிய சவால். இந்திய ராஜதந்திரம் வெல்ல வேண்டும், இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படவேண்டும் என்பதே இந்தியர்களின் விருப்பம் என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்