மத்திய பட்ஜெட் 2025: ஆவலுடன் எதிர்நோக்கும் தொழில்துறையினர்
|வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக, தொழில்துறை மற்றும் பல்வேறு துறையினருடன் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு மாத காலம் நடத்திய ஆலோசனையை கடந்த 6-ம் தேதி நிறைவு செய்தார்.
இந்த ஆண்டு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில், என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப்போகின்றன, என்னென்ன மாற்றங்களை நிதி மந்திரி செய்யப்போகிறார்? என்பதை அறிய தொழில் துறையினர் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
நிதி ஒருங்கிணைப்பு, வரி முறையை எளிமைப்படுத்தல் மற்றும் முதலீடு சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றில் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செலவினங்களை அதிகரிப்பது, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பது, தனியார் துறை முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் வரி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. புதிய வரி முறையில் வரிவிலக்கு வரம்பை ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி, வரி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் வரி செலுத்துவோருக்கான தனிநபர் வரி நிவாரணம் வழங்குவதில் பட்ஜெட் கவனம் செலுத்த வேண்டும் என்று எர்ன்ஸ்ட் & யங் இந்தியா செய்தியை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது. ஆனால், பிப்ரவரி 1-ம் தேதி (சனிக்கிழமை) பட்ஜெட் அறிவிக்கப்பட்டால் பங்குச்சந்தைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் நேரடி வர்த்தக அமர்வு நடத்தப்படும் என பங்குச்சந்தைகள் தெரிவித்துள்ளன.