ஆன்மிகம்
ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி
ஆன்மிகம்

ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி

தினத்தந்தி
|
22 Dec 2024 9:21 AM IST

மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அய்யப்பசாமிக்கு தங்க அங்கி அணிவித்து அலங்கார தீபாராதனை நடைபெறும்.

இந்நிலையில் மண்டல பூஜை தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா வழங்கிய தங்க அங்கி இன்று காலை 6 மணிக்கு ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக புறப்பட்டது. வழிநெடுகில் பக்தர்களின் தரிசனம், வழிபாட்டுடன் வரும் ஊர்வலம், 25ம் தேதி பம்பை வந்தடையும். பம்பை கணபதி கோவில் முன் மதியம் 3 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும்.

பின்னர் பம்பையில் இருந்து தங்க அங்கி தலைச்சுமையாக சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும். 25ம் தேதி மாலை 6.30 மணிக்குஅய்யப்பனுக்கு உறுமி இசையோடு மகா தீபாராதனை நடக்கும். 26-ம் தேதி மதியம் 12 மணிக்கு நடைபெறும் மண்டல பூஜையிலும் இந்த அங்கி அய்யப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும்.இதனிடையே 73 இடங்களில் தங்க அங்கிக்கு வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க அங்கி வருகையை ஒட்டி 25 ம் தேதி மதியம் 1 மணி வரை மட்டும் பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் தங்க அங்கி புறப்பட்டு சன்னிதானம் வந்து சேர்ந்த பின்னரே பம்பையில் இருந்து பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டிச. 26ம் தேதி நடைபெறும் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்படாமல் இருக்க ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிச. 25ம் தேதி 50 ஆயிரம் பேரும், டிச. 26ம் தேதி 60 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த இரண்டு நாட்களிலும் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்