நான்காவதாக பிறந்ததும் பெண் குழந்தை... தந்தை செய்த வெறிச்செயல்
|குடிபோதையில் இருந்த திவாகர், குழந்தையை தூக்கி வேகமாக தரையில் அடித்துள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தை சேர்ந்தவர் திவாகர். 30 வயதான இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவி இறந்துவிட்டார்.
இதனை தொடர்ந்து இரண்டாவதாக ஒரு பெண்ணை திவாகர் திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், கடந்த மாதம் 2-வது குழந்தை பிறந்தது. இரண்டாவது மனைவிக்கு பிறந்த இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்ததால் ஆண் குழந்தைக்காக காத்திருந்த திவாகருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அத்துடன், தனக்கு பிறந்த 4 குழந்தைகளும் பெண் குழந்தைகளாக பிறந்ததால் திவாகர் கடந்த சில நாட்களாக கோபத்தில் இருந்துள்ளார்
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குடிபோதையில் இருந்த திவாகர், தனது பெற்றோர் மற்றும் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த திவாகர், மனைவியின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த ஒரு மாத பெண் குழந்தையை வேகமாக தூக்கி தரையில் அடித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உடனடியாக குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி குழந்தை இறந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக திவாகரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திவாகரை கைதுசெய்தனர்.