'மஞ்சுமல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை
|மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
திருவனந்தபுரம்,
மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி உலகளவில் 241 கோடி ரூபாய் வசூலித்தது. மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இத்திரைப்படம் முதல் இடத்தில் இருக்கிறது.
சமீபத்தில், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக தான் 7 கோடியை முதலீடு செய்திருந்ததாகவும், ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், தற்போது வரை தனக்கு லாபத்தில் ஒரு ரூபாய் கூட பணம் அளிக்கவில்லை எனவும், முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டது. இந்நிலையில், மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதன்படி, இத்தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியை கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மற்ற தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், பாபு ஷாஹிர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கிடைத்த பணத்தை கருப்பு பணமாக மறைத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.