< Back
தேசிய செய்திகள்
இந்த மாதத்தில் இயல்புக்கு குறைவான மழைப்பொழிவு இருக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம்
தேசிய செய்திகள்

இந்த மாதத்தில் இயல்புக்கு குறைவான மழைப்பொழிவு இருக்கும்; இந்திய வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
19 Jun 2024 3:09 PM IST

நடப்பு ஜூனில் (ஜூன் 18 வரை) நாடு முழுவதும் ஒட்டுமொத்த அளவில் 64.5 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்துள்ளது. நீண்டகால சராசரியான 80.6 மி.மீ. என்ற அளவை காட்டிலும் இது 20 சதவீதம் குறைவாகும் என்றும் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் டெல்லி, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், தண்ணீர் பற்றாக்குறை, வெப்ப கால நோய்கள் என மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், நடப்பு மாதத்தில் இந்தியாவில் சராசரி மழைப்பொழிவானது, இயல்புக்கும் குறைவாக இருக்க கூடும் என தெரிவித்து உள்ளது.

இவற்றில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயல்பில் இருந்து இயல்புக்கும் கூடுதலான மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் இயல்புக்கும் குறைவாக மழைப்பொழிவு இருக்க கூடும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதிகளில் வெப்ப அலை வீசி வரும் சூழலில், இந்த தகவல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு ஜூனில் (ஜூன் 18 வரை) நாடு முழுவதும் ஒட்டுமொத்த அளவில் 64.5 மி.மீ. அளவுக்கு மழை பொழிந்துள்ளது. நீண்டகால சராசரியான 80.6 மி.மீ. என்ற அளவை காட்டிலும் இது 20 சதவீதம் குறைவாகும் என்றும் தெரிவித்து உள்ளது.

நாட்டில் பருவமழையானது, நீர்நிலைகள் நிறைவதற்கும் அதன்பின்னர் வருட இறுதியில், பயிர்களுக்கு நீர்ப்பாசனம் அளிப்பதற்கும் உதவும். நாட்டில் 50 சதவீத விவசாய நிலங்கள் பருவமழையை நம்பியுள்ளன. இதனால், இந்திய பொருளாதாரத்திலும் அது முக்கிய பங்காற்றுகிறது. வேளாண் பிரிவில் சீரான வளர்ச்சியானது, பணவீக்கம் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவும்.

வேளாண் உற்பத்தி மற்றும் வருவாய் ஆகியவற்றில் ஏற்படும் அதிகரிப்பானது, மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு நேரடி பங்காற்றுவதுடன், தொழில் வளர்ச்சி அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். இந்த சூழலில், நாட்டில் நடப்பு மாதத்தில் பருவமழை குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்